*இந்திய அரசு செய்ததும்,செய்யத் தவறியும் செய்ய வேண்டியதும்.* :

 

tamil-aipsnjsa24thMarch2020statement

*இந்திய அரசு செய்ததும்,செய்யத்  தவறியும் செய்ய வேண்டியதும்.* : 

 மக்கள் ஆரோக்கிய இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை

 (சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் மக்கள் ஆரோக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுந்தரராமன், இரகுனந்தன், சரோஜினி, மற்றும் சுலக்க்ஷனா நந்தி  உள்ளிட்ட முப்பது மருத்துவ நிபுணர்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று தொடர்பாக அலசி ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்கவும் மக்களுக்கு வேண்டியதை எடுத்துக் கூறவும் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் வாராவாரம் அவர்கள் அறிக்கை வெளிவரும். 24.03.2020 தேதியிட்ட அறிக்கையின் சுருக்கம்) 

 

1)உலகளாவிய கொரோனா நோய் இந்தியாவில் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது.  தொற்று நோயுடன் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் வழியாகவும், அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் வழியாகவும் பரவுதல் என்ற  இரண்டாம் கட்டம். இந்தத் தருணத்தில், மத்திய அரசு தக்க நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை தடுத்து நிறுத்துவதில் பலகீனம் இருந்தது  தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.

   

2) *மக்களுக்கு போதுமான விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்காமை*   மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, சாதாரண சளிக் காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சு திணறல்  ஆகிய நோய்கள் தொடர்பான புள்ளி விபரங்களைத் தொகுத்து வெளியிட்டு வந்தது. கொரோனா தொற்று நோய் வேகமாக பரவும் இந்த சூழ்நிலையில் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதிக்கு பிந்தைய   புள்ளி விவரங்களை அரசு வெளியிடவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் கிடைத்திருந்தால் சிகிச்சை அளிப்போருக்கு இது தொடர்பான உண்மை நிலை தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். தங்களை ஆயத்தம் செய்து கொள்வதற்கும் ஏதுவாக இருந்திருக்கும். பரிசோதனைக்காக வருவோர் பற்றி ஓர் மதிப்பீடு கிடைத்திருக்கும். நோய் தொற்று பற்றிய எண்ணிக்கை மீதான பீதி ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. தக்க புள்ளி விவரங்கள்,  தக்க நேரத்தில் கொடுக்கப்பட்டு இருந்தால் மருத்துவ சேவை அளிப்போர் தயார் நிலையில் இருக்கவும், ஒரு பாதுகாப்பு அற்ற நிலையை உணர்வதையும் தவிர்த்திருக்கலாம். இதனால் தற்போது சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் இதர நோயாளிகள் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே வெளி நோயாளிகளைக் கையாள்வதில் மருத்துவ விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சளிக் காய்ச்சல் மூச்சு திணறல் நோய் தொடர்பான புள்ளிவிபரங்களை பொது வெளியில் உடனடியாக வெளியிட வேண்டும். அத்தோடு மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இது  பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் சுகாதாரத் துறை முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

 

 

3) *அரசுக்கு எங்கள் கோரிக்கை* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செம்மையாக   நிறைவேற்ற பரந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். சிவில் சமூகத்தில் தொண்டாற்றி வரும் ஆரோக்கிய இயக்கங்கள் மக்கள் அறிவியல் இயக்கங்கள் தொழிற் சங்கங்கள் ஆகியவற்றை  செம்மையாக இதில் பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு தனிமைப் படுத்துதல் அவசியம் எனினும் அதுவே தீர்வல்ல என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். “தனிமைப் படுத்துதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தொற்று உறுதி செய்தவர்களின் தொடர்பில் இருந்தோரைக்  தேடிக் கண்டறிதல்” என்ற ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ளா விட்டால் ஊரடங்கும் தனிமைப் படுத்துதலும் தற்காலிகமான திறனற்ற முழுயற்ற பணிகளாக முடிந்து விடும். எனவே தனிமைப் படுத்துதல் மட்டுமே முக்கியமான நடவடிக்கை என்று முன்னிறுத்துதல் கூடாது.

‌  4) *குறைந்த பட்ச பரிசோதனை வசதிகளை உத்திரவாதம் செய்க* இந்த வாரத்தில் தான் தனிநபர் பாதுகாப்புக் உபகரணங்களுக்கும்   5000 வெண்டிலேட்டர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சேவைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் படி கூறியுள்ளது. இவையெல்லாம் தேவையான நடவடிக்கைகள் தான். என்றாலும்,  முன்கூட்டியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இப்போது தான் வாரம் ஒன்றுக்கு 60000 பேரை பரிசோதனை செய்யும் அளவு பரிசோதனை வசதிகளை மேம்படுத்த உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று பரவத் தொடங்கியயுள்ள இடங்களில்  பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள் இல்லாமல் அதேசமயம் நோய் தொற்றோடு இருப்பவர்கள், தொடக்க நிலை தொற்றில் இருப்பவர்கள் கடுமையான நோய் தொற்று உடையவர்கள் என எல்லோருக்கும் எல்லா மாநிலங்களிலும் பரிசோதனைகள் செய்யப்பட்ட வேண்டும்.

         5) *மருத்துவ சேவைக்கான உபகரணங்களை உற்பத்தி செய்தல் கொள்முதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் உள்ள நெருக்கடியை அரசு உணர வேண்டும்*  இன்றைய சூழ்லையை நிர்வகிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி, கொள்முதல் மற்றும் அதன் மேலாண்மை ஆகியவற்றில் உள்ள குறைகளை இப்போது தான் அரசு  உணரத் தொடங்கி உள்ளது. ஆனால் மக்களோடு இணைந்து பணியாற்றி வரும் மக்கள் ஆரோக்கிய இயக்கம் மக்கள் அறிவியல் இயக்கங்களில் பணியாற்றி வரும் நாங்கள் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் விதத்தில்  இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு சாதனங்களில் தன்னிறைவு அடைவதற்கு ஏற்ப இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மற்றும் அதன் மேம்பாடு, வணிகக் கொள்கைகள் ஆகியவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம்.  இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில், மருத்துவ சாதனங்களின் தேவை அதிகரித்து வரும் சூழலில், மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்வதும் வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதும் கடினமானதாகவும் தடைகள் மிக்கதாகவும் நம்மால் கொள்முதல் செய்ய முடியாத  நிலைகளிலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசு இனிவரும் காலங்களில் இதனைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

              6) *தனிமைப் படுத்துதல் கண்காணிப்பில் வைத்தல் மற்றும் சமூகத்தில் இருந்து தள்ளி இருத்தல் போன்றவற்றை நடைமுறை படுத்தியதில் உள்ள குறைபாடுகள* நோய் தொற்றைத் தடுக்க தனிமைப் படுத்துதல் கண்காணிப்பில் வைத்தல் சமூகத்தில் இருந்து  தள்ளி இருத்தல் போன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவதில் பெரும் இருக்கும் குறைபாடுகளைக் கண்டு கவலை கொள்கிறோம். வீட்டில் தனித்திருக்க வைக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவ மனை அல்லது தக்க நிறுவன ஏற்பாட்டில் கொண்டு வருவது நல்லதே. ஆனால் இத்தகைய சூழ்நிலையில் மனித மாண்புகள் மற்றும் மனித உரிமைகள் மீறுவதும் நிகழ்ந்துவிட வாய்ப்புகள் அதிகம். இது மனித உரிமைகள் பற்றியும் ஜனநாயகப் பூர்வமாக நடந்து கொள்ளும் அரசுகளில் கூட சாத்தியமே. எனவே சிவில் சமூகத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் அமைப்புகளின் கருத்துக்களை கேட்பதும் அதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியம். உதாரணமாக வெளிநாட்டில் இருந்து மும்பை அல்லது டெல்லிக்கு வந்த ஒருவரை தனிமைப் படுத்துதல் என்ற பெயரில் அனைவர் முன்பும்  முத்திரை குத்துதல் அலைக்கழித்தல் போன்ற செயல்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் தவறு என்று சுட்டிக் காட்டி உள்ளது. இவர்கள் உரிய கௌரவத்தோடு நடத்தப்படவேண்டும். அதேபோல் சந்தேகத்தின் பெயரில் வீட்டில் தனித்து வைக்கப்பட்டிருப்போர் பயந்து வெளியேறி விடும் போது அவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தல், தனித்து வைப்பதற்காக முஷ்டி பலத்தை பயன்படுத்துதல் மருத்துவ சேவை மறுக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்து தங்கள் நோய்களை மறைத்துக் கொள்வார்கள். இது பீதி நிறைந்த எதிர்ப்புக்கும் காரணமாகிவிடும்.

 

     7) *தனிமைப் படுத்துதல் வீட்டில் கண்காணிப்பில் வைத்தல் போன்ற செயல் போன்றவற்றை  நடைமுறைப் படுத்தும் போது சமூக பொருளாதார நிலையில் இருந்து கருத்தில் கொள்ள வேணாடியது*  கொரோனா தொற்றைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்திகள் பெருமளவில்  பரப்பப்பட்டாலும் அது வசதி படைத்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கே அதிகம் பயன்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு அவர் தம் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. தனிமைப் படுத்துதல் உள்ளிட்ட  கொரோனா தடுப்பு நடவடிக்கை செய்திகளை அறிந்திருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். அல்லது தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். இதற்காக இவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. இப்படிக் கூறுவதால் தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

     8) *ஊரடங்கு உத்தரவு நடைமுறைப் படுத்த பட்டபோது எழுந்த கவலை*  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலத்தில் மீறப்படும் மனித உரிமை மற்றும் மனித மாண்புகள் மீறப்படுவது ஒருபுறம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள காலத்திற்கும்  அதன் விதத்திற்கும் உரிய ஆதாரமும் வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். கிடைக்காமல் போய்விடும் என்ற பீதியும்   சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட வேண்டும் என்ற பீதியையும் உருவாக்கியது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களிலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. பெரும்பாலும் கிராமப் புறங்களுக்கு திரும்பிச் செல்லும் இவர்கள் நோய் தொற்றை எடுத்துச் செல்லும் அபாயத்துடனே சென்று சேர்ந்துள்ளனர். ஏற்கனவே பலவீனமான சுகாதார கட்டமைப்பு வசதிகள் உள்ள கிராமப் புறங்களை இது மேலும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்னர்  இதுபற்றி தெளிவான மதிப்பீடு இருந்திருக்க வேண்டும். எப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது போன்ற விசயங்களில் தெளிவான அளவீடு இருந்திருக்க வேண்டும். புற நோயாளிகள் பிரிவை மூடியது போக்குவரத்து இன்மையால் மக்கள் மருத்துவ மனைகளுக்கு சென்றடைய முடியாமல் அவதிப்பட்டது ஆகியவை மிக மோசமான செயல்பாடுகள் ஆகும். எனவே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவும் நிலைமைகளை மதிப்பீடு செய்யவும் தக்க விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலை மக்கள்  குடிபெயர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோர் ஆவர்.ஏற்கவே நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் மேலும் பாதிக்கப்படுவர். பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நிதி மூலதன காரர்களுக்கும் வரிச் சலுகை என்ற பெயரில் அள்ளிக் கொடுத்து விட்டதால் தற்போதைய அவசர நிலைக்கு கூட அரசால் போதுமான நிதி ஒதுக்க செய்ய முடியவில்லை. கல்வி சுகாதாரம் மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே தொடர்ந்து நிதிக் குறைப்பு செய்ததும் தனியார்மயமாக்கியதும் இன்று எழுந்துள்ள பெரும் நோய் தொற்றில் இருந்து பாதுக்க தக்கதொரு நடவடிக்கை எடுக்க இயலாமல் செய்துள்ளது.

 

      9) *21 நாள் ஊடங்கு அறிவிப்பட்ட தருணம் முதல்….* நாங்கள் இந்த அறிக்கையை இறுதிப்படுத்தி  வெளியிடும் நேரத்தில் நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு  சமூக விலக்கம் மட்டுமே என்று முன் நிறுத்த அரசு முனைகிறது. நாங்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல சமூக விலக்கு தற்போதைய தொற்று நோயைத் தடுக்கும் ஒரு செயல்பாடே அன்றே அதுவே முழுமை ஆகாது. ஊரடங்கு மூலம் மட்டுமே பிரச்சினையை தீர்த்து விட முடியும் என்பதற்கு சான்றுகள் இல்லை. அதேசமயம் ஊரடங்கு உத்தரவு இல்லாமல் தென் கொரியா தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறப்பான நோய்க் கட்டுப்பாடு செய்யப்பட்டது. இந்த நாடுகளில் இருந்து இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தை  சுகாதாரத் துறை தயார் நிலையில் வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.இதே காலகட்டத்தில் கொரோனா நோய் தொடர்பான அனைத்து நம்பகமான தேவையான தரமான புள்ளிவிவரங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நோய் தொற்று எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு பரிமாணத்தில் பரவியுள்ளது? எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரவியுள்ளது என்று கணக்கிட்டு அந்தப் பகுதியில் ஊரடங்கு தனிமைப் படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதையும் ஊரடங்கு மூலம் கட்டிப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் மிகுந்த மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டிய   காவல் துறையும் அதிகார வர்க்கமும் கடைபிடிக்கும் கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். காச நோய் , எச்ஐவி உள்ளிட்ட பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள், அத்தியாவசிய சேவைகளைப் பெற விரும்புவோர் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் நேர்ந்துள்ள அவலத்தால் மனம் உடைந்து போய் இருக்கிறோம். இதேபோல் தினக்கூலி பிரிவினர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேற்று மாநிலங்களில் குடி பெயர்ந்து வாழ்பவர்களுக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இன்றி நிற்கின்றனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் ஊரடங்கு மூலம் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிற  இறப்புகளைக் காட்டிலும் கூடுதல் சேதம் இதன் மூலம் விளைந்து விடும். 

   கொரோனா தொற்று நோய் பிரச்சினை தீர்க்கப்படும் வரை  நாங்கள் உருவாக்கியுள்ள நிபுணர் குழு இதுபற்றி அரசுக்கும் மக்களுக்கும் இதுபற்றி எடுத்துக் கூறும் பணியில் செயல்படுவோம்.  சிவில் சமூகக் குழுக்களோடு இணைந்து செயல்படும்.

 தமிழில்: நா.மணி

tamil-aipsn-jsa24thMarch2020statement